பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்கு மகளீர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு ரூபங்களில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை எனவும் குடும்ப வன்முறைகள் அலுவலக வன்முறைகள் பொதுவான இடங்களில்இடம்பெறும் வன்முறைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற வன்முறைகள் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை மூலம் ஏற்படுகின்ற வன்முறைகள் என பல்வேறு வன்முறைகள் பெண்கள் மீது சுமத்தப்படுகின்றதெனவும் யுத்தம் மற்றும் வறுமை போன்ற பல்வேறு அனர்த்தங்களுக்குள் சிக்கித் தவிக்கின்ற எமது சமூகம் இவ்வாறான உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் எனவும்இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சரியான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கென மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்படவேண்டும் என்பதுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 3, 400 க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பெண்களுக்கு எதிராக திணிக்கப்பட்டுள்ளது என்பதனையும் அது 2021 ஆம் ஆண்டு 3555 ஐ தாண்டியுள்ளதாகவும் புள்ளி விபர அடிப்படையில் சுட்டிக்காட்டியிருந்தார்.மேலும் சட்டவிரோத மதுபாவனை சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

என்பதுடன் அது தொடர்பில் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பல பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது வேட்பாளர் பட்டியலில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 34% இட ஒதுக்கீட்டினை வழங்கி இருந்ததாகவும் அதே போன்று கட்சிக்கு கிடைத்த பிரதேச சபையின் தவிசாளரையும் பெண்களுக்கென ஒதுக்கி பெண்களை கௌரவித்திருந்ததாகவும் .

தொடர்ந்துவரும் காலங்களிலும் பெண் தலைமைத்துவம் முன்வர வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், அவருடன் இணைந்து கட்சியும் மிக உறுதியாக இருப்பதாகவும் பெண்களுக்கான வாழ்வாதாரம் உருவாக்கப்பட வேண்டும்

என்பதிலும் அத்தோடு பெண்கள் கல்வித் துறையிலும் உயர் பதவிகளில் முன் நின்று சேவையாற்ற வேண்டும் என்பதிலும் தாம் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெண்களுக்கான தலைமைத்துவத்தினை சமூகம் நிலைப்படுத்த முன்வருகின்ற போது பெண்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் தங்களது சுய ஆளுமை விருத்தியில் மிக அக்கரையுடன் பெண்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளின் போது மண்முனை மேற்கு பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுத்தலைவர் ராமேஸ்வரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இழங்கேஷ்வரி ஜெயந்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்