ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) என்பவர் அனுபவமுள்ள அரசியல்வாதி என்பதால், அவர் அரசியலை அளவீடுகளின் அடிப்படையில் கணிக்கும் திறனை கொண்டுள்ளார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகும் வருடம் என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பொருத்தமற்ற வேலைத்திட்டங்களே இதற்கு காரணம் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) பதவிக்கு வந்த உடனேயே வற் வரியை குறைத்து அரசின் வருமானத்தை முற்றாக இல்லாமல் ஆக்கியமை அனைத்து நெருக்கடிகளுக்கும் ஆரம்பமாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வேலைத்திட்டம் சம்பந்தமாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க இவற்றை கூறியுள்ளார்.

அத்துடன் மக்கள் மீது நாளுக்கு நாள் சுமைகள் அதிகரித்து வரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் என்ற பொய்யான கருத்தை சமூகமயப்படுத்த ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardena) இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த கடும் பொருளாதார சுமைகளை குறைத்ததே அன்றி அதிகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.