அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாத சட்டத்தை ஒழித்தல், குடிமக்களின் கருத்துக்களை முன்வைக்கவும் பங்களிக்கவும் மக்கள் மன்றத்தை நிறுவுதல் எனப் பல்வேறு கோஷங்களை முன்வைத்து நேற்று கொழும்பில் எதிரணிகள் ஒன்றிணைந்து நேற்று சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினர்.
இதில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவுதினமான நேற்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், புதிய ஆட்சியை அமைக்கும்போது பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் எட்டப்பட்டது.
எதிர்பார்ப்பின் இணக்கப்பாடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தக் கோரிக்கையில், “ராஜபக்ஷ வாதத்துக்கு முடிவு கட்டுதல், 20ஆவது திருத்தத்தை இல்லாது ஒழித்தல், 19ஆவது திருத்தத்தை உரிய திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தல், ராஜபக்ஷ வாதத்துக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல், சகல இனங்கள், மதங்கள், பாலினங்கள் சம உரிமைகள் கொண்ட இலங்கை சமுதாயத்தை அங்கீகரித்தல். பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றிணைந்த ஒப்பந்தங்கள் மூலம் துரித தீர்வு காணுதல், மருந்துகள் உரங்கள், உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், தொழில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல், வறுமைக் கோட்டின்கீழ் இருக்கும் மக்களை பாதுகாத்தல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்துக்கள், கடன்கள் என்பவற்றை அறியும் உரிமையை மக்களுக்கு வழங்குதல், பொது நிறுவனங்களின் அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களையும் கணக்காய்வு செய்தல். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், மோசடி ஊழல் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து தண்டனை வழங்கல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாத சட்டத்தை ஒழித்தல், குடிமக்களின் கருத்துக்களை முன்வைக்கவும் பங்களிக்கவும் மக்கள் மன்றத்தை நிறுவுதல்”, என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இணைந்திருங்கள்