அரசாங்கம் புதிய அமைச்சரவையை நியமித்திருக்கின்றது. ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கூறி – சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில்தான், இந்த அமைச் சரவை நியமனம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் போராட்டக் காரர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது என் பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் உறுதியாக தெரிவித்திருக் கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அமைச்சரவை நியமனத்தை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். ஒரு ஸ்திரமான அரசாங்கம் இல்லாது, சர் வதேச நாணய நிதியத்தை அணுக முடியாது. இந்த பின்புலத்தில் தான், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக எதிர் கொள்ளும் உபாயங்கள் தொடர்பிலேயே ராஜபக்ஷக்கள் கவனம் செலுத்துகின்றனர் எனத் தெரிகின்றது.
சர்வதேச நாணய நிதியத் திடமிருந்து கடன்களை பெறுவதன் மூலம், தற்போது மக்கள் எதிர் கொண்டுவரும் அன்றாட பிரச்னைகளுக்கு தற்காலிகமாக தீர்வை கண்டுவிட்டால், காலிமுகத்திடல் போராட்டகாரர்களை பலவீனப் படுத்திவிட முடியுமென்றே அவர்கள் கருதுகின்றனர்.
மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பொருளாதார சுமைகள்தான், போராட்டக்காரர்களின் பலமாக இருக்கின்றது. இதனை ஓரளவு சரிசெய்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி விட்டால், அதன் பின்னர் அரசாங்கத்தை சுமுகமாக கொண்டுசெல்ல முடியுமென்றே அரசாங்கம் கணக்குப் போடுகின்றது.
பிரச்னைகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கு பதிலாக, தற்காலிகமாக தீர்ப்பது தொடர்பிலேயே வியூ கங்கள் வகுக்கப்படுகின்றன.
அரசாங்கம் இவ்வாறு கருதுவதற்கு பின்னால், எதிரணியின் பலவீனங்களும் இருக்கின்றன. எதிரணி தங்களை இன்றுவரையில் சரிவர ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லை. சஜித் பிரேமதாஸ அடுத்த ஜனாதிபதி – தானே என்னும் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றார்.
இதனால், எதிரணிக்குள்ளும் ஒரு குழப்ப நிலைமை பேணிப் பாதுகாக்கப்படுகின்றது.
ரணில் ஒருபுறமாகவும், சம்பிக்க ரணவக்க ஒருபுறமாகவும், கரு ஜெயசூரிய இன்னொரு புறமாகவும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். ஒப்பீட்டடிப்படையில், சஜித் பிரேதாஸவின் எதிரணி பலமாக இருந்தாலும்கூட, சஜித் அனைவரின் ஆதரவையும் பெறாது விட்டால், அவரால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. சந்திரிகா குமாரதுங்கவும் சில காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
எதிரணிக்குள் இவ்வாறான குழப்ப நிலைமை தொடருமானால், ராஜபக்ஷக்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கான
வாய்ப்புக்கள் தொடர்பிலேயே சிந்திப்பர். இந்ப் பின்புலத்தில்தான் தான் பதவி விலகப்போவதில்லையென்று ஜனாதிபதியும், தான் பதவி விலகப் போவதில்லையென்னும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷவும் இருக்கின்றனர்.
ஏனெனில், அவர்கள் பதவி விலகினால் அடுத்தது யார் என்னும்
கேள்விக்கு எதிரணியில் உறுதியான பதில்கள் இல்லை. ரணில் – மைத்திரிபால சிறிசேன ஆட்சியின்போது ஏற்பட்ட குளறுபடிகளே ராஜபக்ஷக்களுக்கு வாய்ப்பளித்தது. அதேபோன்றுதான் இப்போதும் எதிரணிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைமை ராஜபக்ஷக்களுக்கு ஏதோவொரு வகையில் உற்சாகமளிக்கின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் புதிய அமைச்சரவையுடன் மீளவும் ராஜபக்சக்கள் களமிறங்கியிருக்கின்றனர். இது ஒரு வகையில் கயிற்றின் மேல் நடப்பது போன்றதுதான். ஆனால், நடந்துவிட்டால் அதன் பின்னர் பிரச்னைகளை இலகுவாக எதிர்கொள்ளலாமல்லவா! இதுதான்
புதிய அமைச்ரவைக்கு பின்னாலுள்ள திட்டம்.
இணைந்திருங்கள்