இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட பிரகடனம் தற்போது நிலவும் பொது மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அவர்கள் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த அறிவிப்பில், அவசர கால பிரகடனத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அமைதியான முறையில் கூடும் சுதந்திரம் மீறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் இறைமையைப் பாதுகாக்க உடனடியாக செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியை பதவி விலக செய்யும் நிலைக்குத் தள்ளும் இந்தப் போராட்டங்களை அவசரகாலச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் மக்களின் இறைமையின் சகல அம்சங்களும், அரச மற்றும் அதன் பிரதிநிதிகளால் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றது.