அரச பொறிமுறை மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கும் வகையில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அமைச்சரவை நாளை (22) நியமிக்கப்படவுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் முற்பகல் 9 மணிக்கு, ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

பிரதமராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதே ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதால், சர்வக்கட்சி அரசு அமைந்த பின்னரே முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், அனைத்து கட்சிகளும் அரச பங்காளிகளானால் பிரதமர் பதவியில்கூட மாற்றம் வரலாம் எனவும் தெரியவருகின்றது.