வடகிழக்கு பிராந்தியத்தில் ரெயில் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், அருணாச்சல பிரதேசத்தில் மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களையும் சீன எல்லை வரை இணைக்கும் ரெயில் பாதைகளை அமைக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டங்களின் கீழ், அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய ரெயில்வே திட்டங்களுக்கான இறுதி இட ஆய்வுப் பணிகள் முழுவீச்சில் ரெயில்வேயால் தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) சப்யசாச்சி டே இந்த ஏற்பாடுகள் குறித்து தகவல் அளித்துள்ளார். அதிகாரி சப்யசாச்சி டே கூறுகையில், அண்டை நாடான பூட்டானுக்கு ரெயில் பாதைகளை கொண்டு செல்வதே எங்கள் திட்டம்.ரெயில்வே மூலம் பூடானை இணைக்க திட்டமிட்டுள்ளோம். வடகிழக்கு எல்லை ரெயில்வே மண்டலம், அருணாச்சல பிரதேசம் உட்பட வடகிழக்கு பிராந்தியத்தில் மேலும் சில புதிய ரெயில்வே திட்டங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

சீன எல்லையை ஒட்டிய பாலுக்போங்கில் இருந்து தவாங் மற்றும் சிலபத்தர் வரையிலான புதிய ரெயில் பாதையை சீன எல்லையில் அமைக்கவும், முர்கோங்செலக்கில் இருந்து பாசிகாட் வரை ரெயில் பாதையை நீட்டிக்கவும் இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, இந்த ரெயில் பாதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.