மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கை தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும்.

மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எம்மால் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும். சுகாதார அமைச்சு, சுகாதார பணியகம் மூலமாக பல்வேறு சுகாதார வழிகாட்டிகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை முழுமையாக பின்பற்றுவதில் சந்தேகம் உள்ளது. ஒரு சிறிய குழு தவறு செய்கிறது.

இதனால் பெருமளவிலான மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை சகலரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் எப்போதும் மீண்டும் மோசமான தாக்கத்திற்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் போராடுகிறோம் என்பதை சகலரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.