பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால் அதனை நீக்குவதற்கு ஆதரவளிக்க அரசாங்கத்துடன் இணைந்த இடதுசாரிக் கட்சி ஒன்று முன்வந்துள்ளது.

பயங்கரவாதச் சட்டம் தனிப்பட்ட அரசியல் நலன்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படுவதை இன்று நாம் காணமுடிகிறது. இந்த சட்டமூலம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். என இலங்கையின் பழமையான கட்சியான லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பயங்கரவாதச் சட்டத்தை இல்லா தொழிக்கக் கோரி மேற்கொள்ளப்படும் மக்கள் மனுப் பிரசாரம் தொடர்பில் பேராசிரியர் விதாரண மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மீடியா சங்கத்திலிருந்து பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பமான இந்த மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மன்னார், நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் பெருமளவில் இடம்பெற்றது.

பொதுமக்களுக்கு மேலதிகமாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல், மத, வெகுஜன அமைப்புக்கள் எனப் பலரும் பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

பயங்கரவாதச் சட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம். என்று ராஜபக்ச அரசின் பங்காளியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கூறினார்.

இந்த பயங்கரவாதச் சட்டம் யுத்தத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பயங்கரவாதச் சட்டத்தை அமுல்படுத்துவது நியாயமற்றது. இன்று இது அரசியல் ஆதாயம் பெற பயன்படுத்தப்படுகிறது.

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்னதாக, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர், மேலும் பலர் இன்னும் சிறையில் உள்ளனர்.

பயங்கரவாதச் சட்டம் மனித உரிமை மீறல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால் அதை நீக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்துவதில்லை. எனவே அவற்றை இரத்துச் செய்வது நல்ல யோசனையாகும். என பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

இலங்கை அரசின் சார்பில் ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையில், ஜனநாயக சுதந்திரம் தடுக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்தே அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத் திருத்தத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலகில் உள்ள மற்ற இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தை கையாள்வதில் மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே நியாயமான சமநிலையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், விசாரணை மற்றும் வழக்குத் தொடரப்படுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதை இலங்கை அங்கீகரிக்கிறது.

இந்த நோக்கங்களை மனதில் கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு 43 வருடங்களின் பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நான் சட்டமூலமொன்றை முன்வைத்தேன், அது திருத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகும். என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பான தனது அறிக்கையில், சர்வதேச நியமங்களுக்கு இணங்காத தன்னிச்சையான தடுப்பு மற்றும் சித்திரவதை போன்ற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கும் சிக்கலான விதிகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

“பயங்கரவாதத்தின் மிகையான பரந்த மற்றும் தெளிவற்ற வரையறை, சட்டத்தை தன்னிச்சையாக பயன்படுத்த அனுமதிக்கிறது, ஒரு சட்ட அமுலாக்க அதிகாரி முன்னிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒரு வழக்கறிஞர் இல்லாமல் பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தின் ஆரம்ப ஆதாரமாக பயன்படுத்த அனுமதிக்கிறது.

நிர்வாக ரீதியாகவும், நிர்வாக ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறும் அதிகாரிகளை முன்கூட்டியே தடுத்து வைத்தல், மற்றும் தண்டனையிலிருந்து விலக்குதல் உள்ளிட்ட விதிகள் இதில் உள்ளடங்கும்” என்று உயர் ஸ்தானிகர் ‘மைக்கேல் பாச்லெட்” இலங்கை தொடர்பான 16 பக்க அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.