” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த ஜனநாயகத் தலைவர். அவர் ஹிட்லர்போல செயற்பட்டது கிடையாது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை ஆட்சிசெய்ய ‘ஹிட்லர்’ ஆட்சிதான் வேண்டும்.” – என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்பது உண்மைதான். விலைவாசியும் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதனை நாம் மறுக்கவில்லை. இவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அதனை நாம் செய்வோம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. பெப்ரவரி 3ஆம் திகதிக்கு பிறகு திட்டங்கள் துரிதப்படுத்தப்படும். சகல மக்களையும் இணைத்துக்கொண்டு பொருளாதார சவால்களை வெற்றிகொள்வோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமூக வலைத்தளங்களில் விமர்சித்தாலும் ஜனாதிபதி திறமையான அதேபோல் சிறந்த தலைவர் என்பது எமக்கு தெரியும். அவர் எப்போதும் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றார். ஹிட்லர் போல செயற்படுகிறார் எனக் கூறப்பட்டாலும் அவர் சிறந்த ஜனநாயகத் தலைவர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர்தான் வேண்டும். ஏனெனில் தொழிற்சங்கங்கள் நாட்டை குழப்பிக்கொண்டு உள்ளன.” – என்றார்.