தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் எதேச்சாதிகாரமாக கூறியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமை, இந்த அச்சுறுத்தலைக் கண்டித்ததுடன், நீதி அமைச்சர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
நீதி அமைச்சர் அலி சப்ரி, இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு கடந்த ஜனவரி 27ஆம் திகதி வழங்கிய செவ்வியில், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வாக பொருளாதார கேந்திர நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை சட்டரீதியாக தடுக்க வழி செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார்.
துறைமுகம், எண்ணெய்க் கூட்டுத்தாபனம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் மருத்துவத் துறைகளில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை சட்டப்பூர்வமாக ரத்து செய்வதுதான் அவரது வெட்கமற்ற முன்மொழிவாகும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிசாருக்கும், இராணுவத்திற்கும் போராட்டம் நடத்தும் உரிமை இல்லை என்று கூறிய அலி சப்ரி, அரசியலமைப்புச் சட்டத்தில் அதை ரத்து செய்வது மிகவும் பொருத்தமானது என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இல்லையெனில், வேலைநிறுத்தம் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளில் பணியாற்றும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற மற்றும் திறமையான பணியாளர்களை விரைவாகப் பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் யோசனை முன்மொழிந்தார்.
வேலைநிறுத்தம் “நியாயமற்றது” என்று விவரித்த அவர், அதன் பின்னால் “நாசகார சதிகள்” இருப்பதாகவும் கூறினார்.
துறைமுகங்கள், எரிபொருள் மற்றும் மின்சார சபையில் அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மையைக் கருத்திற்கொண்டு அவை சதித் திட்டங்களாக இருக்கும் என்று சுட்டிக்காட்டிய நீதியமைச்சர், மக்கள் இம்முறை வலிமையான ஜனாதிபதியை எதிர்பார்த்திருப்பதாகவும், எனினும், அவர் மென்மையாக இருப்பதாகவும், ஜனாதிபதி இன்னும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை ஆட்சி செய்வது குறித்து எந்த நோக்கும் இல்லாதபோது, சரியான திட்டமிடல் மற்றும் இலக்குகளுடன் பொது சேவையை பராமரிக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்து ஜனநாயக சமூக போராட்டங்களை முடக்கும் ஆட்சிக்கு, சட்டம் இயற்றுவது இந்த அரசாங்கத்தின் “சௌபாக்கியமான எதிர்காலம்” கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதை தொழிற்சங்க தலைவர்கள், நீதி அமைச்சர் சப்ரிக்கு நினைவூட்டியுள்ளனர்.
“வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமை ஆகியவை உலகளாவிய உரிமைகள் என்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஞாபகப்படுத்தியுள்ளனர்.
இணைந்திருங்கள்