தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் 2022ம் ஆண்டுக்குரிய வருடாந்த தேசிய மாநாடு முல்லைத்தீவில் 20.02.2022அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான கட்சியின் கொள்கை பிரகடனம் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தேசங்கள் இணைந்த ஒரு நாடு என்ற அரசியல் தீர்வும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்
வலிந்து காணாமல்போக செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை கோரி தொடர்ந்து போராடுவோம்
இன அழிப்பு போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்


போரின் பின்னரும் தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இனஅழிப்பு செயற்பாடுகள் தடுத்துநிறுத்தப்படவேண்டும்.
தமிழ்த்தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தினை பாதுகாப்போம், தமிழர் தேச வரலாற்றினை சிங்களமயமாக்க முயலும் சதிமுயற்சிகளை முறியடித்துச் செயலாற்றவேண்டும்.


மலையக மக்களின் உரிமைகளுக்காக இணைந்து குரல்கொடுப்போம், கிராமிய உழைப்பாளர்கள் எதிர்நோக்கும் சமூகமாற்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாமும் இணைந்து குரல்கொடுப்போம்.


முன்னால் போராளிகளையும் மக்களையும் வறுமையிலிருந்து பாதிப்புக்களில் இருந்தும் மீட்டெடுக்க உழைப்போம்.
சமூக சீரழிவுக்கு எதிராகப் போராடுவோம். போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறை கலாச்சாரத்திற்கு எதிராகப் போராடுவோம் என கொள்கைப்பிரகடனம் எடுக்கப்பட்டுள்ளது.


இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது,


எங்களுடைய தேச அங்கிகாரத்தினை நாங்கள் பெறாவிட்டால் இந்த இனம் அழிவும் தேசத்தினை அழிப்பதுதான் எதிரியின் நோக்கம் தேசத்தின் அங்கிகாரம் மட்டும்தான் தமிழ் இனத்தினை காப்பாற்றும்.


இன்று இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார பலம் சிதறிவிட்டது சாப்பாட்டிற்கு கெஞ்சவேண்டிய நிலைக்கு போய்விட்டது.
அந்தவகையில் இந்தியாவிடம் சென்று மூன்று மாதத்திற்கு ஒருக்கால் 500 மில்லியன் டொலர் கடனைப் பெற்று வட்டி கட்டவேண்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 500 மில்லியனை கட்டாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் இன்னும் அழியும் இவ்வளவிற்கு மோசமான நிலையில் அரசு இருக்கின்றது.


அரசினை காப்பாற்றும் நிலையில் இந்தியா இருக்கின்றது. இந்தியாவிற்கு விசுவாசமாக செயற்படுகின்ற அமைப்புக்கள் இருக்கின்றன அந்த 6 அமைப்புக்கள் இந்தியாவிடம் சென்று இன்றைய காலகட்டத்தில்தான் சொல்ல வேண்டும்.


இலங்கை அரசு உங்கள் காலில் விழுந்திருக்கின்றது தமிழர்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றால் இன்று தான் செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.


இதனையும் விட சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா? இதனையும் விட ஒருபேரம் பேசல் இருக்கா இல்லை அந்த ஆறு அமைப்புக்களும் என்ன விரும்புகின்றார்கள் சிங்களவர்கள் விரும்புகின்ற 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சொல்லித்தான் கேட்கின்றார்கள்.


இன்று சம்பிக்க ரணவக்க ஒரு சிங்கள பௌத்த வெறிகொண்ட நபர் அந்த சம்பிக்கரணவக்க கூட 13 ஆவது திருத்தசட்டத்தினை ஏற்கவேண்டும் என்று மாநாடு வைத்து தெரிவித்துள்ளார். 13 ஆம் திருத்தம் எந்தளவிற்கு மோசமான விடயம் என்பதை இதை வைத்துக்கொண்டாவது புரிந்துகொள்ளலாம் இதனை தெரிந்திருந்தாலும் நீங்கள் முகவர்கள் என்றபடியால் தான் இதனை வலியுறுத்துகின்றீர்கள் தமிழ் உணர்வு அல்லது தமிழர்களுக்குரிய அபிலாசைகளில் உங்களுக்கு விரும்பம் இருந்தால் அதற்காக நீங்கள் ஆணையினை பெற்றவர்கள் என்ற கொஞ்சமாவது மதிப்பிருந்தால் இந்த துரோகத்தினை செய்யமாட்டீர்கள்.


இன்று இந்த இனப்படுகொலைக்கு பொறுப்பாளர்களாக சிங்களதேசத்தின் தலைவர்களும் இராணுவமும் மட்டுமல்ல இந்த இனத்தினை காட்டிக்கொடுத்து துரோகமளித்த இந்த ஆறு கும்பல்களின் தலைவர்களும் இருக்கின்றார்கள் இதுதான் உண்மை தங்களின் பதவிக்காகவும், அவர்களின் எஜமானின் விருப்பத்திற்காவும் ஒற்றையாட்சிக்குள் எங்கள் அரசியலை முடக்குவதற்காக இவர்கள் துணைபோனபடியால்தான் இனப்படுகொலை செய்வதற்கு இந்த உலகமே அனுமதித்தது இதுதான் உண்மை.


இந்த உண்மையினை ஒவ்வொரு வீட்டிற்கும் நாங்கள் கொண்டுசெல்லவேண்டும். இன்று எங்களிடம் கேட்கின்றார்கள் இந்த போராட்டத்தினை நாங்கள் செய்வது அரசியலுக்காவாம், தேர்தலுக்காவாம், மாகாணசபையில் வெல்வதற்காகவும். சவால் விட்டு கூறுகின்றோம் நீங்கள் எழுதிய கடிதத்தினை மீளப்பெறுங்கள் அவ்வாறு மீளப்பெற்று இனிமேலும் உங்கள் வாயால் 13 ஆம் திருத்த சட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட உச்சரிக்கப்பாடது என்று வாக்குறுதி எங்கள் மக்களுக்கு கொடுங்கள் நாங்கள் போராட்டங்களை கைவிடுகின்றோம்.


இதனை செய்யாமல் நீங்கள் ஒவ்வொரு நாளும் செயற்படுகின்றபொழுது உங்களுக்கு எதிராக எங்கள் மக்களை அணிதிரட்டுவோம் இந்த துரோக அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டவாளர் க.சுகாஸ், காண்டிபன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

TNPF 1
TNPF 2