உக்ரைன் ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமாகி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சுமூக தீர்வு எட்ட மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சவுதி இளவரசர், இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை குறைக்க அனைத்து உதவிகளும் செய்ய தயார் என கூறினார்.
போர் உக்கிரத்தை குறைக்க சர்வதேச நாடுகள் எடுக்கும் நடவடிவக்கைகளுக்கும் சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மனிதாபிமான உதவிகள் செய்யப்படும் என்றும் அதிபர் செலன்ஸ்கியிடம் உறுதியளித்த அவர், சவுதி அரேபியாவில் உள்ள சுற்றுலா பயணிகள், அங்கு வாழும் உக்ரேனியர்கள் ஆகியோருக்கான விசாக்கள் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் கூறினார்.
இதேப்போல் ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்ட சவுதி இளவரசர், பிரச்னைக்கு தீர்வு காண ராஜாங்க ரீதியிலான அனைத்து உதவிகளும் செய்ய உறுதி பூண்டிருப்பதாக கூறினார். ஒபெக் ஒப்பந்தத்தின் படியே எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறினார். ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள படி கச்சா எண்ணெய் சந்தையில் சமநிலை மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்திருக்கும் நிலையில், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என ஒபெக் கூட்டமைப்பின் தலைவரான சவுதி அரேபியாவை வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை அரசியலாக்க கூடாது என கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தற்கு கண்டனம் தெரிவிக்காத சவுதி அரபியா, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கூட்டத்தின் போது ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்திருந்தது.
இணைந்திருங்கள்