அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களுக்காக எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில், புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் காரணங்களால் பல தசாப்தங்களாக தாமதமாகி வரும் சில தீர்மானங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அதன்போது கூறியுள்ளார்.

அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி, புதிய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பொருளாதாரத்தை சீர் செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.