சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பிலும், பிரதமர் பதவி சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து கொழும்பில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சுயாதீன அணிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெரும தலைமையிலான 16 பேர் கொண்ட அணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வக்கட்சி அரசின் பிரதமரை பெயரிடுவதற்கு இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரே முன்மொழியப்பட்டது.” என சந்திப்பில் பங்கேற்றிருந்த ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
எனினும், மேற்படி சந்திப்பில் பங்கேற்காத ஜே.வி.பி., ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது பிரதமரின் பெயர் முன்வைக்கப்படும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று அறிவித்திருந்தார். இதற்கமையவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றது.
இணைந்திருங்கள்