விமானம் புறப்பட்டுப் பல மணிநேரம் ஆகியிருந்தாலும் மனது இன்னமும் நோர்வேயின் இருள் சூழ்ந்த இலையுதிர்காலத்தின் மழை நாட்களில் தொலைந்து போயிருந்தது.
“அதென்ன. வெளிநாட்டுக்கு வந்து இத்தனை வருஷமாகியும் உனக்கு மட்டும் தான் வேலை இல்லை?”
“பகல் நேரத்திலை எப்படி பொழுது போகுது ?
”கேள்விகள்…..ஒவ்வொன்றுமே ஊசி முள்ளாகத் தான் துளைக்கின்றன. ஒருவரின் அடையாளமாகவே ஆகிவிடும் தகுதி, திறமைகளை ஒரு குப்பையைக் கிளறும் எகத்தாளத்துடன் விமர்ச்சித்து மெல்ல மெல்ல நாமே நம்மைச் சந்தேகிக்கும்படியாக நம்மை மாற்றி விடுவதில் கைதேர்ந்த ஒரு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.
“என்ன. ஏதாவது விசேஷமோ…?! சத்தம் போடாமல் திடீரெண்டு நாட்டுக்குக் கிளம்பிறாய்..”கேலியாம்…………. ஆனால் குரலிலும் சிரிப்பிலும் விகல்ப்பமே தெரிகிறது. ஜாடைப் பேச்சு.. பிரதாபங்கள்..
“உதென்ன புலிநகம் மாதிரி. வெட்ட நேரமில்லையோ.. உனக்கென்னம்மா. தனிக்கட்டை. வீட்டு வேலை ஒண்டுமே இல்லை. கை நகம் எல்லாம் க்யூட்டெக்ஸ் போட்டு….ம்ம்.. எங்களுக்கு மனுசன், சமையல், கழுவல் எண்டு…ஸ்ரைல் பண்ண எல்லாம் எங்க நேரம்..!”வலிக்கிறது. இவர்களுக்கெல்லாம் தமக்கு வேண்டியது என்ன என்பது தெரிந்து தான் இருக்கிறதா? ஆனால் தம் வாழ்க்கையை தமக்குப் பிடித்தமானதாக ஆக்கிக்கொள்ளத் தெரியாதவர்களின் சராசரிப் பொருமல்கள் தானே என என்னால் இவற்றை ஒதுக்கி விட முடியவில்லை. என் வயது இவர்களை உறுத்துகிறதா என்ன…? இந்த இளமையை யார் விரும்பிக் கேட்டார்? முட்டாள்த்தனமாக இருந்தாலும், ‘எனக்கு ஒரு 10 வயது அதிகமாக இருந்திருக்கக் கூடாதா?’ என்று மனம் அடிக்கடி ஏங்குகிறது. தனியே புறப்பட்டு வருவதில் இருந்த தைரியம் இப்படியான ஜீவராசிகளைச் சந்திப்பதற்குத் தான் போதவில்லை.
“ஒரு தமிழ்க்குடும்பம் கீழ் மாடியை வாடகைக்கு விடுகினமாம். உங்களைப் பற்றிச் சொன்னதும், ‘அவ எப்பிடி……? ஏதும் பிரச்சனையான ஆளோ’ எண்டு பயப்பிடுகினம்….”சந்தடி சாக்கில் பிறரின் சொந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமா…? அனுதாபமா..? இல்லையேல் வெறுமனே பிறரைச் சிறுத்துப் போக வைக்கும் வண்ணம் பேசும் குரூரபுத்தி தானா என்று புரியவில்லை.
“அவருக்கு வேறை பொம்பிளை பேசியிருக்காம். உண்மையே?”என்றுமே குறி தவறாத தோட்டாக்கள் இந்தக் கேள்விகள்……. நாளாந்தம் பிரயத்தனப்பட்டு வலுக்கட்டாயமாக நான் அணிந்து கொள்ளும் அன்றைய புன்னகையை நொடி நேரத்தில் பறித்துக் கொண்டு விடும் வார்த்தைகள். அதைத் தொடர்ந்து அன்றைய மீதி நாளைக் கனத்த மனதுடன் கடக்க நான் போராடுவதே எனது தினசரி வாடிக்கையாகி விட்டிருந்தது “வீட்டில சம்பந்தம் ஏதாவது பாக்கினமோ………..?”இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் வணக்கத்திற்கு பதிலாக இந்தக் கேள்வியைத் தான் கேட்கிறார்கள். அக்கறையாம். தனித்திருக்கும் ஒரு பெண் வேண்டி நிற்பதெல்லாம் ஒரு ஆண் துணையைத் தான் என்ற மேலோட்டமான இவர்களது கணிப்பு எரிச்சலூட்டுகிறது.
“ஒத்து வராட்டி bold ஆக பிரிஞ்சு வந்திட வேணும். எங்கட சனம் சும்மா மற்றவைக்காக பொய்யாச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு ஆருக்குமே உண்மையில்லாமல்……… “. பசியுடன் மேயும் பார்வைகள்.புரிந்து கொள்ளாதவர்கள் என்று இவர்களை எல்லாம் புறக்கணித்து விடலாம். ஆனால் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பகிர்ந்து கொள்கிற நெருங்கிய சினேகிதியாக நினைத்த ஒரே ஒருத்தியும் எப்படி மிகச் சின்னத்தனமாக மாறிப் போனாள். சில காலமாகவே வெண்ணிலாவின் கணவனுடன் நான் பேசும் போதெல்லாம் அவள் அவனுடன் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டே இருப்பது என்னமோ உறுத்தத் தான் செய்தது. ஏதோ தற்செயலானதென அந்த எண்ணத்தை ஒதுக்கவே முயன்றேன். ஆனால் நேற்று அவன் என்னை விமான நிலயத்திற்குக் காரில் கூட்டிச் செல்ல முன்வந்தபோது அவனைப் பார்த்து முறைத்தவள் அருவருப்பாக உதட்டைச் சுழித்து ,“ஐயோ. கனக்க பொங்காதைங்கோ. நான் ஏதும் கெஞ்சிக் கேட்டாலும் காரை எடுக்க மாட்டியள். இப்ப தான் புதுசா அக்கறையா?! அவள் taxi எடுப்பாள்.
இல்லாட்டி நான் கூட்டிக் கொண்டு போவேன். நீங்க உங்கட வேலையைப் பாருங்கோ! ”ஒரு கணம் எதுவுமே புரியவில்லை. அப்படிப் பேசியது வெண்ணிலா தானா என்ற ஆச்சர்யத்திலிருந்து இன்னமும் விடுபட முடியவில்லை. அவளுடைய கணவனுக்குக் கொஞ்சம் அவமானமாக இருந்திருக்க வேண்டும். சட்டென்று அந்த இடத்திலிருந்து மாயமாகி விட்டான். என்னைப் புரிந்து கொண்டவள் என்றல்லவா வெண்ணிலாவை நினைத்தேன்! எந்த எதிரியும் என்னுடன் இதை விடக் கேவலமாக நடந்து விட முடியாது என்று தோன்றியது. ஒரு நொடியில் அவள் நட்பை மனதாரத் தகனம் செய்து முடித்திருந்தேன். வாழ்நாள் முழுவதும் கூடவரும் என்று நினைத்த உறவையே முறித்துக் கொள்ள முடிந்த எனக்கு நட்பாவது… ஒன்றாவது……
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணை இவர்களால் எப்படித் தவறாக நினைக்க முடிகிறது!? தன் மனதில் உள்ள விகாரத்தை வைத்துத் தானே பிறரை எடை போடுவோம்? இல்லையேல், இந்த மாதிரிப் பெண்களுக்கு தமது கணவன்மாரில் நம்பிக்கை இல்லாமல் என்றுமே பாதுகாப்பற்ற மனநிலைநிலை தானோ.. சே! தக்க வைத்துக் கொள்ள இத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கும் இப்படி ஒரு பந்தம் தான் மிக மிக அற்பமானதோ..? வெண்ணிலாவின் வார்த்தைகள் நினைவில் வரும் போதெல்லாம் மனம் இருப்புக் கொள்ளவில்லை. தோள்கள் வலித்தன. எப்படியோ தற்செயலாய் நான் கண்ணயர்ந்த போது விமானம் தரையிறங்கப் போவதற்கான அறிவிப்பு கரகரத்தது. இலேசான தலைவலியுடன் இது என்ன.. இரவா பகலா என்ற மயக்கத்துடன் இறங்கி நடந்தேன்.
என்னைக் கூட்டிச் செல்லக் காருடன் விமான நிலயத்திற்கு வந்திருந்த அம்மா, நான் மெலிந்து கருத்து விட்டதாக வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாகவே முறையிட்டார். அப்பாவின் உடல்நிலை பற்றிப் பேசியபடி பயணித்தோம். இரவு பகலாகத் தனியனாய் அவரைக் கவனித்துக் கொள்வதில் பாவம் அம்மா மிகவும் இளைத்திருந்தாள். அதனால் ஏற்பட்ட களைப்பா அல்லது இந்த வயதிற்கேயுரிய உணர்ச்சிக்குழப்பமா என்று தெரியவில்லை. நொடிக்கொரு தடவை அவள் அழுத போது என்னாலும் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இனி மேலும் இவர்களைத் தனித்து விட வேண்டியிருக்காது என்பது ஒரு ஆறுதலைக் கொடுத்தது.அந்த இருண்ட அறைக்குள் கவனிப்பாரற்றவர் போல கிழிந்த நாராய்க் கட்டிலில் முடங்கிக் கிடப்பது என் அப்பா தானா என்று பார்த்ததுமே அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஏன் இந்த நிலை இவருக்கு என்று ஒரு கணம் அம்மா மேல் கோபமாக வந்தது. மறு நிமிடமே என் எண்ணங்களை நினைத்து வெட்கப்பட்டேன். அவர் வயது, உடல் நிலை, தொலைத்து விட்ட ஞாபகங்கள் என்பவை தான் அப்படியான தோற்றத்தை ஏற்படுத்தியதென்பது எனக்குப் புரியச் சற்று நேரமெடுத்தது. ஒரு நிமிடம் கூட ஓய்வென்பதை அறியாத என் அப்பா, அயல் வீட்டுக்காரர் எல்லாம் சிலாகித்துப் பேசிய அவரது கம்பீரமான நடை…
மனைவி, மகள் என்று நமக்காகவே வாழ்ந்தவர், விழிகள் எங்கோ நிலைத்திருக்க இடையிடையே ஏதோ தனக்குள் முணு முணுத்துக் கொள்கிறார். நாம் தன் அறைக்குள் வந்ததைக் கூட கவனிக்காதது போல் ஒரு தனி உலகில் அவர் சஞ்சரிப்பதாகத் தோன்றியது.“உப்பிடித்தான் சம்பந்தமே இல்லாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பார். ” என்று என்னிடம் சொன்ன அம்மா,“இஞ்சருங்கோ. இங்கை, இங்கை பாருங்கோ. எங்கடை அச்சு வந்திருக்கிறாள்.. பாருங்கோ!”என்று அவரின் தாடையைத் தொட்டு என்னை நோக்கித் திருப்புகிறாள். அப்பா என்னையே பார்க்கிறார்.
பாடசாலையில் சேர்ந்த குழந்தை முதல் நாளில் தன் ஆசிரியரைப் பார்த்துச் சிரிக்குமே, அப்படி ஒரு சிரிப்பு அவருடைய முகத்தில் தோன்றித் சற்று நேரம் வரை அப்படியே தொடர்ந்திருந்தது.“அப்பா…” என்று அழைக்கையில் உடைந்தழுதேன். என்னைத் தெரியுதாப்பா..? அச்சு அப்பா. அச்சு!” என்றேன்.அவரின் கை நீண்டது. அருகே செல்ல என் தலையைத் தொட்டார்.“ஒண்டும் நடக்காது கண்ணா… அழாத ! ” என்கிறார்.“அட ! கதைக்கிறார் !” அம்மா வியந்து போகிறாள். என்னை அவர் அடையாளம் கண்டு கொண்டாரா இல்லையா என்பது புரியவில்லை.
“இப்பிடித் தான். தெரிஞ்சு கதைக்கிறாரோ இல்லாட்டிப் பழைய கதை ஏதும் கதைக்கிறாரோ எண்டு சில நேரம் விளங்கிறேல்லை. போன கிழமை தன்ர ப்ரொபெசரை ஒருக்க லஞ்சுக்கு கூப்பிட வேணுமாம். 10, 12 வருஷமா அவையோட தொடர்பில்லாமல் போச்சு. இப்ப ஆள் உயிரோட இருக்குதோ எண்டே தெரியாது. அப்பாவுக்கு இப்பவும் பழைய ஞாபகம்…”அம்மா ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அப்பாவுக்கு நாம் தன்னைப் பற்றித் தான் பேசுகிறோம் என்று புரிந்ததாகத் தெரியவில்லை. எந்தவிதமான சலனமும் இல்லாத அவரது பார்வை விட்டத்தில் லயித்திருந்தது.
“அப்பாவுக்கு வயசுகள் போகுது கண்ணம்மா. அதுக்குள்ளை நிறைய அலுவலுகள் முடிக்க இருக்குது…”என்று அடிக்கடிச் சொல்லியபடி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் 10 வருஷத்துக்கு முந்தைய அப்பா தான் இன்று இவ்வளவு நிதானமாக எந்தப் பதட்டமும் இல்லாமல் கட்டிலில் உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருக்கிறாரா என்று அதிசயமாக இருக்கிறது எனக்கு. அம்மா சுடச் சுடத் தேநீர் கொண்டு வந்து தந்து விட்டு அப்பாவின் உடைகளைச் சரி செய்கிறார். உணர்வுகளின் குழப்பநிலையால் சில மணிநேரம் உடல் சோர்வே தெரியாமல் இருந்தது. தேநீர்க் கோப்பையுடன் வந்து கூடத்தில் உட்கார்ந்த போது தான் பிரயாணக் களைப்பை உணர்ந்தேன். அம்மாவும் தயங்கித் தயங்கிப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“அந்தப் பெடியனுக்கு 30 வயசு தானாம். மனுசி செத்துப் போச்சு. பிள்ளைகள் கூட இல்லை. சாதகம் நல்லாப் பொருந்தியிருக்காம் ராசாத்தி. படம் அனுப்பி விடட்டே?”சட்டென்று அம்மா என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. அவளை ஏறிட்டுப் பார்த்தது தான் தாமதம்.“காசு பணத்திலை கூட அக்கறை காட்டேல்லை. ஏன் ,எதுக்கு டிவோஸ் பண்ண வேண்டி வந்ததெண்டு மட்டும் தான் பெடியன் கேட்டதாம்”தலை லேசாய் வலித்தது. மீண்டும் பலவீனமாய் உணர்ந்தேன். தோள்கள் வலித்தன. கைகள் சோர்வாக..“ம்ம்… !! அந்த- மனுசி நஞ்சு குடிச்ச ஆள் தானே…? எனக்கும் தான் தெரிய வேணும்? கல்யாணம் கட்டி நாலே மாசத்தாலை மனுசியை நஞ்சு குடிக்க வச்சது என்ன…? அல்லது ஆர்… எண்டு…..?
”என்னை மீறிய இந்த ஆவேசம் மட்டும் எப்படி, எங்கிருந்து தான் வருகிறதோ..!“உந்த வாயால தான்………”“மனுசன் என்னை விட்டிட்டு ஓடினவன் எண்டு சொல்லிறீங்களாம்மா…….?”“என்ன பிள்ளை நான் அப்பிடிச் சொல்லுவனா… !?”எழும்பத் தெம்பிருக்கவில்லை. ஆனால் தூங்க வேண்டும். இல்லா விட்டால்… மாத்திரைகள் கூட உபயோகப்படப் போவதில்லை.அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டேன். கட்டிலில் மல்லாக்காய்ப் படுத்துக் கொண்ட போது, அப்பாவின் ‘அழாத கண்ணா… ஒண்டும் நடக்காது!’ என்ற குரல் தான் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன நினைத்து அப்படிச் சொன்னாரோ..! தன் கற்பனை உலகில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை வைத்துச் சொன்னாரா…? அல்லது தனக்காக பயப்படாதே என்று ஆறுதல் சொன்னாரா… ? இல்லை, நான் தனித்து விடப்பட்டதைப் புரிந்து கொண்டு எனக்கு தைரியம் சொன்னாரா…? என்னவாக இருந்தாலும் என்னைத் தன் மகள் என்று புரிந்து கொண்டு தானே அப்படிப் பேசினார் என்ற உண்மையில் உடைந்து போனேன்.
உஷா-நோர்வே
இணைந்திருங்கள்