பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி விட்டு புதிய பிரதமரை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

’நிவாரணம் கிடைக்க நீண்ட காலம் செல்லும்’

சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகினாலும் எந்தவோர் அர்த்தமுள்ள நிவாரணம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நிதிச் சவால்களை கையாள்வதில் தற்போதைய அரசாங்கம் முற்றாகத் தோல்வியடைந்தமையால் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் திறமையின்மையால் நாட்டை ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

2019இல் தாம் நாட்டை இயக்கும் போது பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மை மக்களை வீதிக்கு இறக்கியுள்ளது என்றார்.

மோசமான பொருளாதார நிலைமை அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது என்றும் நடப்பது நாட்டுக்கு பேரழிவு என்றும் தெரிவித்த அவர், இரண்டு ஆண்டுகளாக, இந்த அரசாங்கம் பொருளாதாரப் பிரச்சினைகளின் அனைத்து அறிகுறிகளையும் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கு நிவாரணம் பெற செல்லப் போவதில்லை என்ற விடயத்தில், தற்போதைய அரசாங்கம் உரிய நேரத்தில் தலையீடு செய்யவில்லை என கடுமையாக சாடினார்.

இந்தியாவினால் நீடிக்கப்படும் எரிபொருளுக்கான கடன் வரியானது மே மாதம் இரண்டாவது வாரம் வரை மட்டுமே நீடிக்கும் என தெரிவித்த அவர், அதன் பின்னர் இலங்கை கடும் சிக்கலில் சிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும்போது மாற்று வழிகளைத் தேடுவதன் முக்கியத்துவத்தையும் முன்னாள் பிரதமர் வலியுறுத்தினார்.