சுதந்திர மனிதன் ஒவ்வொருவருக்கும் தமது தேசத்தின் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை உண்டு. அவ்வாறு தமிழீழ மக்களுக்கும், தமிழீழ தேசத்தின் பிரிக்கப்படமுடியாத அடையாளமாகவுள்ள தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் , இலக்கில் நாம் முன்னோக்கி செல்வதற்கான உற்சாகத்தையும் உணர்வுகைளயும் தமிழீழத் தேசியக்கொடிநாள் புதுப்பித்து நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
நொவெம்பர் 21 தமிழீழத் தேசியக் கொடி நாளினை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பேரினவாத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ள தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, உலகின் ஜனநாயக நாடுகள் சிலவற்றிலும் தமழீழத் தேசியக்கொடியினை ஏற்றும், ஏந்து உரிமை மறுக்கப்படுவதாகக் கிடைக்கும் தகவல்கள் வேதனை தருவதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை நடாத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாடப்பட்டு வரும் தமிழீழத் தேசியக் கொடி நாள் செய்தியின் முழுவிபரம் :
இன்று தமிழீழத் தேசியக்கொடி நாள்.
கடந்த 2021ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நொவெம்பர் மாதம் 21ம் நாளை, தமிழீழத் தேசியக்கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை பிரகடனம் செய்திருக்கிறது.
1990ம் ஆண்டு இரண்டாவது தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தமிழீழத் தேசியக்கொடி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இத் தேசியக்கொடிக்கு மதிப்பளித்து அதனைக் கொண்டாடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை மேற்கொண்ட பிரகடனத்தின் அடிப்படையில் இவ் ஆண்டு இரண்டாவது தடவையாகத் தமிழீழத் தேசியக்கொடி நாள் கொண்டாடப்படுகிறது.
உலகில் சுதந்திரமடைந்த பல நாடுகள் தமது தேசியக்கொடிக்காக ஒரு நாளைப் பிரகடனம் செய்து கொண்டாடி வருவதனைப்போல, சுதந்திர வேட்கையுடன், தனக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்க வேண்டும் என்ற வேணவா கொண்ட தமிழீழத் தேசமும் தமிழீழத் தேசியக்கொடி நாளைக் கொண்டாடுவது சிறப்பு மிகுந்த நிகழ்வாகும்.
1990ம் ஆண்டு தமிழீழத் தேசியக்கொடி அறிமுகம் செய்யப்பட்ட போது தமிழீழத் தேசியக்கொடி குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுத்த உத்தியோகபூர்வப் பிரகடனத்தையும் நாம் இத் தருணத்தில் நோக்குதல் பொருத்தம் மிகுந்ததாகும்.
; «தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்துக்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக் காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொடி அமைகிறது» எனத் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டமை குறித்து விடுதலைப்புலிகள் பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முரசறைந்திருந்தது.
மேலும், தேசியக்கொடியின் நிறங்களாக மஞ்சள், சிவப்பு கறுப்பு, வெள்ளை நிறங்கள் அமைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்தத் தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் தனியானதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு. இந்தத் தன்னாட்சி உரிமை அவர்களின் அடிப்பமையான அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து. தன்னாட்சி உரிமையினை நிலைநிறுத்தவதற்காக தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதனை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது எனவும்,
தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழத் தனியரசை அமைத்து விட்டாற்போல நாம் முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் கொள்ள முடியாது. தமிழீழ சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். வர்க்க சாதிய முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும். பெண் அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும. அதற்கு சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமத்துவமும் சமதர்மமும் சமூகநீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான மாற்றத்தை வேண்டிய அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கிறது எனவும்,
விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையையும் தாங்கிக் கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மனஉறுதியினைக் குறித்துக் காட்டுகிறது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
தமிழீழ மக்களுக்கு உரித்தான தாயகப்பூமியினையும், தமிழீழத்தில் சமூகநீதி நிலவுகின்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற விருப்பினையும், எத்தகைய துன்பம் வந்தாலும் விடுதலையில் உறுதியுடன் செயற்படும் உறுதியினையும் வெளிப்படுத்தும் வகையில் தேசியக்கொடியின் நிறங்கள் அமைந்துள்ளன.
தேசியக்கொடி என்பது ஒரு தேசத்தின் ஆன்மாவாக, அதன் உயிர் நாடியாக, அதன் குறியீடாக இருக்கிறது.
தேசியக்கொடி புனிதம் வாய்ந்த ஒன்று. அது வெறும் சீலைத் துணியல்ல. ஒரு தேசத்தின் கொள்கை, உரிமை, எண்ணம், வாழ்வு, விழுமியம் ஆகியவற்றை உள்ளடக்கி, அவற்றின் குறியீடாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதுதான் தேசியக்கொடி.
நமது தமிமீழத் தேசியக்கொடியானது, நமது தேசிய மாவீர்களின் ஈகத்தின் குறியீடாக,தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக,தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு அமைத்திருந்த தமிழீழ நடைமுறையரசின் நினைவின் நீட்சியாக,தமிழீழ மக்களின் சுதந்திரவேட்கை அறித்தின்பாற்பட்டது என்பதன் வெளிப்பாடாக, தேசிய விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையை எட்டியவர்களாய் தமிழீழ மக்கள் வாழ்வதற்கு சமத்துவமும் சமூகநீதியும் நிலவும் புரட்சிகர சமூகத்தை உருவாக்கும் அரசியல் இலக்கின் சாட்சியாக,எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு விடுதலைய அடைய வேண்டும் என்ற மக்களின் உறுதியின் குறியீடாகத் தமிழீழத் தேசியக்கொடி நிமிர்ந்து நிற்கிறது.
நமது தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ மக்கள் அனவரும் உணர்வோடும் எழுச்சியோடும், தமழீழத் தனியரசை அமைத்திடும் உறுதியோடும் நம் கைகளில் ஏந்தி நிற்க வேண்டும்.
அன்பான மக்களே,
தமிழர்கள் 70 ஆயிரம் ஆண்டு நீண்ட வரலாற்றைக் கொண்ட மக்கள்;. இவ் நீண்ட நெடும் வரலாற்றுக்காலத்தில் பல கொடிகள் பறந்தன. இதில் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சோழப் பேரரசின் புலிக்கொடி. அப் புலிக்கொடியின் வரலாற்றுநீட்சியாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் நாம் பார்க்க முடியும்.
தேசியக்கொடி என்பது தேசங்களின் கொடி. அந்தத் தேச மக்களின் கொடி. உலகில் உள்ள தேசங்களின் மக்கள் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தவும், தேசத்தை உலக அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யவும், தமது தேசங்களின பெருமையினைக் கொண்டுவவதற்கும் தேசியக்கொடியினை ஏந்தி நிற்பார்கள்.
உலகில் தேசங்கள் தமது சாதனைகளை வெளிப்படுத்தி முரசறையும் போதெல்லாம் தேசியக்காடியினை முன்னிறுத்துவார்கள். தேசங்களின் மகிழ்வின் போது தேசியக்கொடியினை தலைநிமிர்த்தியும் துயரத்தின் போது தலைதாழ்த்தியும் தமது உணர்வினை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
உலகில் அமைந்துள்ள தேசங்கள் எல்லாம் தமக்கானதொரு தனியரசை இதுவரை அமைத்துவிடவில்லை. அரசாக அமைந்த தேசங்கள் மட்டுமன்றி அரசற்ற தேசங்களும் தமது விடுதலையை அவாவி தமது தேசியக் கொடிகளை ஏந்தி நிற்கிறார்கள்.
தேசியக்கொடியினை ஏந்தி நிற்பது தேசப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு. சுதந்திர மனிதன் ஒவ்வொருவதுக்கும் தமது தேசத்தின் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை உண்டு.
தமிழீழ மக்களுக்கும், தமிழீழ தேசத்தின் பிரிக்கப்படமுடியாத அடையாளமாக அமைந்துள்ள தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு.
தாயகத்தில் தமிழீழ மக்களுக்குத் தமது தேசியக்கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாத்தில் இருந்து தமிழீழ தேசம் சிங்கள் பௌத்த பேரிகவாதப்பூதத்தின் முழுமையான ஆக்கரிமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்தி நிற்கும் அரசியல் உரிமை எமது தாயக மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
சிங்களப் பேரினவாத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ள தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல உலகின் ஜனநாயக நாடுகள் சிலவற்றிலும் தமழீழத் தேசியக்கொடியினை ஏற்றும், ஏந்து உரிமை மறுக்கப்படுவதாகக் கிடைக்கும் தகவல்கள் வேதனை தருவதாக அமைகின்றன. இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை நடாத்தும்.
தாயகத்திலும் உலகில் தமிழர் வாழும் நாடுகள் எங்கும்; தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமையினை நாம் நிலைநிறத்த வேண்டும்.
தமிழீழத் தேசியக்கொடி தமிழீழ இலட்சியத்தை நாம் எந்தவித தளர்வுமின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு ஊக்கம் தந்த வழிகாட்டிய நிற்கிறது. தமிழீழத் தேசியக்கொடிநாள் எமது இலக்கில் நாம் முன்னோக்கி செல்வதற்கான உற்சாகத்தையும் எமது உணர்வுகைளயும் புதுப்பித்து நிற்கிறது.
உலக வரலாறு கண்டிராத வீரத்தினதும் ஈகத்தினதும் குறியீடாக அமைந்திருக்கும் நமது தேசியக்கொடியினை,போர்க்களத்தில் நமது வீரர்கள் அடைந்த வெற்றிகளின்போது பட்டொளி வீசிப்பறந்த நமது தேசியக்கொடியினை,தமிழீழ தேசத்தின் தேசியநிகழ்வுகளில் எல்லாம் தேசியக்கொடிப் பாடலுடன் கம்பீரமாக ஏறிநின்ற நமது தேசியக்கொடியினை, புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் கொடிகளுக்கு நிகராக எற்றி மகிழ்ந்து கொண்டாடும் நமது தேசியக் கொடியினை, மாவீர்நாளின் நாம் வணங்கி நிற்கும் தேசியக் கொடியினை, நாம் இன்றைய தமிழீழத் தேசியக்கொடி நாளில் ஏந்தி நிற்கிறோம்.
எமது மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நாம் உடைத்தெறிய நாம் உறுதி பூண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடாய் நாம் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்தி நிற்கிறோம்.
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனயரசு அமையப்போவது காலத்தின் நியதி. இது தவிர்க்க முடியாத வரலாற்றுக் கட்டாயம். உலகின் புவிசார் அதிர்வுகளிள் விளைவாக, தமிழீழ மக்களின் சுதந்திரவேட்கையின் பயனாக ஒரு நாள் தமிழீழத் தனியரசு உதயமாகும்.அப்போது தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் உலகப்பரப்பெங்கும் பட்டொளி வீசிப்பறக்கும்.
வாழ்க தமிழீழத் தேசியக்கொடி.
வாழ்க தமிழீழ மக்கள்-
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசியக் கொடி நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்